மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட சம்பவம்: உயிர்தப்பிய பெண் வெளியிட்ட அதிர்ச்சி வாக்குமூலம்.!!!
மட்டக்களப்பு பகுதியில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உயிர்தப்பிய பெண் ஒருவர், தனது அனுபவத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, சம்பவம் நடைபெற்ற தினம் காலை சுமார் 10.30 மணியளவில் வவுணதீவு சந்தியில் தனது குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது, ஒரு முச்சக்கர வண்டி வந்து ஏறுமாறு சாரதி கேட்டதாக கூறினார். பணம் இல்லை எனத் தெரிவித்தபோது 100 ரூபாய்க்கு அழைத்துச் செல்லுவதாக கூறியதால் குழந்தையுடன் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும், அதில் வயோதிபப் பெண் ஒருவரும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்த வயோதிபப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறங்கியதாகவும், அதன் பின்னர் தன்னை புடவைக்கடை வீதியில் இறக்கிவிட்டதாகவும் கூறினார்.
அங்கு இருந்த மற்றொரு பெண் “சாரி எடுக்க போகிறேன், ஆட்டோவில் வாருங்கள்” எனக் கூறியதாகவும், அதன்படி தாம் அருகிலிருந்த நகைக் கடைக்கு சென்று தங்க மோதிரத்தை மீட்டுக்கொண்டு மீண்டும் அந்த இடத்திற்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண் தொலைபேசியில் மற்றொருவருடன் பேசி மணிக்கூட்டு கோபுரம் பகுதிக்கு வருமாறு கூறியதாகவும், அங்கு மீண்டும் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும் அவர் தெரிவித்தார். அதன்பின் பொதுச்சந்தை வீதி வழியாகச் சென்று, சிறிது நேரம் நிறுத்திய பின்னர் பிரதான பஸ் தரிப்பு நிலையம் வழியாக வவுணதீவு நோக்கி பயணித்ததாகவும் கூறினார்.
வலையிறவு பாலம் அருகே சென்றபோது, அந்தப் பெண் தன்னுக்கும் தனது குழந்தைக்கும் பச்சை நிற ஜூஸ் கொடுத்து, தமக்கு விளாம்பழ ஜூஸ் கொடுத்ததாகவும், அதை குடித்த பின்னர் மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கியதாகவும், அதன் பின்னர் கத்தி ஏந்திய இளைஞன் ஒருவர் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும் கூறினார்.
அதன்பின்னர் பயணம் தொடர்ந்தபோது திடீரென மயக்கமடைந்ததாகவும், பின்னர் நீரில் மூழ்கிய நிலையில் விழித்ததாகவும், கிணற்றில் இருந்து கயிறு மூலம் யாரோ ஒருவர் தன்னை மீட்டதாகவும் அவர் தெரிவித்தார். பலமுறை நீரில் மூழ்கியபோது “அம்மா” என்று கத்தி உதவி கேட்டதாகவும் அவர் உணர்ச்சியுடன் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.