கிழக்கு மாகாண விளையாட்டு வீரர்கள்: தேசிய ரீதியில் 08 ம் நிலையில் காணப்படுவது; கவலைக்குரிய விடயமாகும் – உதுமாலெப்பை.!!!
(கே எ ஹமீட்)
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தெரிவிப்பு!
கிழக்கு மாகாண விளையாட்டு வீரர்கள் தேசிய ரீதியில் பல தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றும் கிழக்கு மாகாணம் தேசிய ரீதியில் 08 ம் நிலையிலேயே காணப்படுகிறது. பயிற்சிகள் மேற்கொள்வதற்குரிய போதியளவான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதோடு, உபகரணங்களைக் கொண்டு எமது விளையாட்டு உத்தியோகத்தர்களை மேலும் பயிற்றுவிக்க, வெளிநாட்டுப் பயிற்சிகளை அவர்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, இந்நிலையை சீர் செய்து தருவதன் மூலம் தேசிய ரீதியில் எமது கிழக்கு மாகாணத்தின் தரத்தினை உயர்த்திக் கொள்ள முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சின் திருத்தச் சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்..
விளையாட்டுகள் என்பது எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களின் வளர்ச்சிக்கும் முக்கிய தளமாக கருதப்படுகிறது. குறிப்பாக சர்வதேச ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு விளையாட்டாக றக்பி விளங்குகிறது. இதில் தைரியம், ஒற்றுமை, உடல் உறுதி ஆகியவை தேர்ச்சி பெறுகின்றன. இவ்வாறான விளையாட்டில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் வளர்ந்து வரும் விளையாட்டாக றக்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேசத்தில் 2011ம் ஆண்டு பாலமுனை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் றக்பி விளையாட்டு அறிமுகமானது. ஆரம்பத்தில் சிலர் அதை ஏற்க தயங்கினாலும் இன்று அந்த விளையாட்டில் பல பாடசாலை மாணவர்களும், கழக வீரர்களும் ஈடுபட்டு வெற்றிகளை பதிவு செய்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டில் மின்ஹாஜ் தேசிய பாடசாலை மாகாண சம்பியனாகவும்(Champion) 2023 – 2025 இல் பாலமுனை விளையாட்டுக் கழகம் மாகாண அளவில் முதலிடம் பெற்று, பல தடவைகள் 02 ஆம் இடங்கள் (07 தடவைகள்), தேசியத்திற்கு தெரிவாகியும் பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.
இந்த வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய தடையாக பயிற்சி செய்யத் தேவையான உரிய மைதானம் இல்லாத நிலை காணப்படுகின்றது. தற்போது மாணவர்கள் மற்றும் வீரர்கள் கிரவல் தரைகளில் பயிற்சியினை மேற்கொள்வதனால் அடிக்கடி விபத்துக்குள்ளாகி நீண்ட நாட்கள் ஓய்வில் செல்லும் சூழ்நிலைகள் உருவாகின்றன. தற்போதைய நிலையில் றக்பி விளையாட்டுப் போட்டிகளுக்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் கழக வீரர்கள் பயிற்சி பெற பல மைல் தூரம் கடந்து சென்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் லீலா ரத்ன மைதானத்திற்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாலமுனை பகுதியில் அமைந்துள்ள றக்பி விளையாட்டு மைதானத்தினை நவீன வசதிகள் கொண்ட றக்பி விளையாட்டு மைதானமாக அமைக்கும் திட்டத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் காணப்படுவதால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்துவதிலும், மாவட்ட ரீதியில் விளையாட்டுக் கழகங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதிலும், திறமையான விளையாட்டு வீரர்களினை இனங்காண்பதிலும், அவர்களுக்கு போதியளவான பயிற்சிகளை வழங்குவதிலும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. எனவே, இவற்றை நிவர்த்தி செய்வதற்கான கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தில் காணப்படும் பின்வரும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தினை பொருத்தவரை 20 பிரதேச செயலக பிரிவுகள் காணப்படுகின்ற போதிலும் 20 பிரதேச செயலக பிரிவுகளுக்குமாக 13 விளையாட்டு உத்தியோகத்தர்கள் கடமை புரிந்து வருகின்றனர். 07 பிரதேச செயலக பிரிவுகள் விளையாட்டு உத்தியோகத்தர்கள் இன்றி வெற்றிடமாக காணப்படுவதாலும் எமது அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் பாரிய முன்னேற்றம் காண்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றோம்.
கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் தெகியத்த கண்டியிலிருந்து பானம வரையில் அமைந்துள்ள சிங்கள மொழிப் பிரதேசங்களுக்கு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும் (DYSO), அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மொழிப் பிரதேசங்களுக்கான மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும் (DYSO) நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி வெற்றிடத்திற்கு ஒருவரை விளையாட்டுத்துறை அமைச்சு நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை பிரதேசம் ஆகக் கூடுதலான சனத்தொகையான (82,000) மக்கள் வாழும் பிரதேசமாகும். சம்மாந்துறையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், தொழிற்பயிற்சி அதிகாரசபை, தொழிநுட்பக் கல்லூரி உட்பட பல முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. சம்மாந்துறை விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக சம்மாந்துறை ஆலயாடி வட்டையின் 10 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு சம்மாந்துறை விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை மேற்கொண்டும் சம்மாந்துறை விளையாட்டு மைதானம் இதுவரை அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளது.
சம்மாந்துறை பிரதேச மக்களின் விளையாட்டு மைதானம் அமைக்கும் கடந்தகால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, விளையாட்டுத்துறை அமைச்சு சம்மாந்துறை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்க வேண்டுமென வினயமாக கௌரவ அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு பொத்துவில் பசறிச்சேனை பொது விளையாட்டு மைதானமும் பார்வையாளர் அரங்கும் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பொத்துவில் பசறிச்சேனை பொது விளையாட்டு மைதானத்தையும் பார்வையாளர் அரங்கினையும் பசறிச்சேனை விளையாட்டு வீரர்களும், அருகம்பே பிரதேசத்திற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொத்துவில் பசறிச்சேனை பொது விளையாட்டு மைதானத்தையும் அரங்கையும் புனரமைப்புச் செய்து தருமாறு வேண்டிக் கொண்டார்.
அண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற ஹர்த்தால் தொடர்பாக பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் ஹர்த்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெற்றியடைந்தது என்றும், இன்னும் சில உறுப்பினர்கள் ஹர்த்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தோல்வி அடைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற ஹர்த்தால் தொடர்பாக நீண்ட நேரம் நான் கருத்து தெரிவிக்க வேண்டும் ஆனால் எனக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் போதாது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என நினைக்கிறேன். ஹர்த்தால் வெற்றி அடைந்ததா? அல்லது தோல்வி அடைந்ததா? என்பதை விட்டுவிட்டு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏன் ஹர்த்தால் நடாத்தப்பட்டது என்ற காரணங்களை அறிந்து அதற்கான தீர்வுகளை ஆளும் கட்சியினர் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.