ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு.!!!
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இதன்படி மின்சாரக் கட்டண திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக 13.56 சதவீத மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி 0 முதல் 30 அலகுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 4.3 சதவீதம் கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்தம் சுமார் 15 ரூபாய் அதிகரிக்கப்படுகின்றது.
31 முதல் 60 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 6.9 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதத்திற்கு சுமார் 45 ரூபாய் அதிகரிக்கப்படுகின்றது.
61 முதல் 90 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 6.9 சதவீத உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மாதாந்தம் சுமார் 120 ரூபாய் அதிகரிக்கப்படுகின்றது.
91 முதல் 120 அலகுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு 7.1 சதவீதம் கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணம் சுமார் 420 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு அதிகப்படியான கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த பிரிவில் மின்சாரக் கட்டணம் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாக உள்ள மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டண உயர்வு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதே பிரிவில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 9.6 சதவீத கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.