காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால், வெள்ளத் தடுப்பு வேலைத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.!!!
சீரற்ற காலநிலை காரணமாக காத்தான்குடி பிரதேசத்தில் ஏற்படும் வெள்ள நீரினை முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் அமர்வொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (15) சனிக்கிழமை சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர் கலாநிதி என்.என்.எம். நிஹாஜ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது சம்மேளன அனர்த்த முகாமைத்துவ குழு செயலாளர் அனீஸ் அஹமட் தலைமையிலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீனின் வழிநடத்தலிலும் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் பிரதான விரிவுரையாளராக வெள்ளத் தடுப்பு வேலைத் திட்டங்களிலும் இது தொடர்பாக சர்வதேச ஆய்வுகளையும் கள விஜயங்களையும் முன்னெடுத்தவரும் துறைசார் நிபுணத்துவமிக்கவருமான எமது பிரதேசத்தினைச் சேர்ந்த பேராசிரியர். AWM. றஸ்மி Ph.D அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், இது விடயம் தொடர்பில் தனது அனுபவங்களையும் பாடங்களையும் படிப்பினைகளையும் முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கருத்துரைத்திருந்தார்.
வெள்ள தடுப்பு வேலைத் திட்டங்களினை முன்னெடுத்து வரும் ICHARM நிறுவனத்தின் பிரதிநிதிகளான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்ற ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Katsunori Tamalooua அவர்களும் நேபாள் நாட்டினைச் சேர்ந்த Bathri Shreestha ஆகிய இருவரும் பிரசன்னமாகியிருந்தனர்.
எமது பிரதேசத்தில் கடந்த காலப்பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆய்வுகளையும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ஜனாப். ASM. சியாத் அவர்கள் விளக்கினார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்தி குறித்த பகுதிகளிலுள்ள வாவிகளினால் ஏற்படும் வெள்ள நீர் அபாயத்தினை முகாமை செய்வது தொடர்பிலான ஆய்வினையும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளினை உள்ளடக்கிய முன்மொழிவொன்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் திரு. M. மயூரன் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.
இது விடயமான சந்தேகங்களுக்கு தெளிவுகள் காணப்பட்டதுடன், கருத்துக்கள் பரிமாறப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
நகரசபை, பிரதேச செயலகம் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோரினை ஒருங்கிணைத்து இவ் வேலைத் திட்டத்தினை தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் எமது பிரதேசத்திலுள்ள அரச நிறுவணங்களின் பதவிதாங்குனர்கள் அவர்களின் பிரதிநிதிகள், துறை சார் நிபுணர்கள், புத்திஜீவிகள், சம்மேளன அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.



