மனித வள மேம்பாடு: நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் – பிரதமர் ஹரினி அமரசூரிய.!!!
நாட்டின் எதிர்கால மாற்றத்திற்காக மனித வளத்தை தரமான முறையில் மேம்படுத்துவது முக்கிய காரணியாகும் என்றும், அதற்குள் நாட்டின் ஒட்டுமொத்த முன்பள்ளி அமைப்பையும் ஒழுங்குபடுத்தும் புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று, மேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில், முன்பள்ளிகளை தரமான முறையில் முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு பொதுவான படிவத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. பிரதமர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான புத்தகத் தொகுப்புகளை நேரில் வழங்கினார்.
பிரதமர் உரையில் மேலும் கூறியதாவது:
“ஒரு அரசாங்கம் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஆரம்பக் கல்வியின் ஸ்திரத்தன்மை, தரம், பாதுகாப்பு, மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் தாக்கம் ஆகியவை தேசிய கல்வி இலக்குகளுடன் ஒத்துப்போவது எமது பொறுப்பாகும். அதற்கான தலையீடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், ஆரம்பக் கல்வியில் நுழைவதற்கு முன்பள்ளிக் கல்வி கட்டாயமாகும். முன்பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள் செய்யும் பணியின் தரத்தை வலுப்படுத்த அரசாங்கம் செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.”
மேல் மாகாண சபையின் பிரதான தலையீட்டின் கீழ், மேல் மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.