சர்வதேச மகளிர் தின நிகழ்வில்; காத்தான்குடி சாதனைப் பெண்களுக்கு கெளரவிப்பு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் என்பன இணைந்து நடாத்திய மகளிர் தினம் மற்றும் இப்தார் நிகழ்வு நேற்று (08) மாலை காத்தான்குடி கடற்கரையிலுள்ள ரைய்யான் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வானது, காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் அவர்களின் தலைமையில், ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி திருமதி அனீஸா பிர்தெளஸின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இதன்போது காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜூத் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சில்மியா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெண்கள் உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் சட்டத்தரணி ஏ.உவைஸ் மற்றும் இஸ்லாத்தில் பெண்கள் உரிமைகள் எனும் தலைப்பில் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நளீமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
குறித்த நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நசீர்தீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தனுஜா, பிரதேச செயலக கணக்காளர் சித்ரா உட்பட காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு, நிகழ்வின் இறுதியில் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.















