எண்ணெய் கையிருப்பு இல்லை என ஈரான் வலியுறுத்தல்: அமெரிக்க அறிவிப்பால் சந்தையில் மேலும் பதற்றம்.!!!
சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில் கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெயோ அல்லது உபரி எண்ணெய் கையிருப்போ தற்போது இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 20 நிலவரப்படி, கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடைகளை தளர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கையை ஈரானின் எண்ணெய் அமைச்சகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில் கப்பலில் ஏற்றப்பட்ட நிலையில் எந்த கச்சா எண்ணெய் அல்லது உபரி கையிருப்பும் ஈரானிடம் இல்லை. அமெரிக்காவின் தடைகள் தளர்த்தல் குறித்த கருத்துக்கள், எண்ணெய் வாங்குவோருக்கு நம்பிக்கையூட்டுவதையும் சந்தை மனநிலையை சீர்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் மோதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தை ஏற்கனவே பெரும் நிலையற்ற தன்மையில் உள்ளது.
இந்நிலையில், ஈரானின் இந்த மறுப்பு மேலும் சந்தையில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
முன்னதாக, ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான தடைகளை இந்த ஆண்டு ஏப்ரல் 19 வரை தற்காலிகமாக தளர்த்துவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.