காத்தான்குடியில் பஸ் தரிப்பிடம் அமைக்க; ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு.!!!
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்திற்கு அருகாமையில் புதிய பஸ் தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்காக ரூ.6 லட்சம் நிதி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் காத்தான்குடி நகர சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதான வீதியில், குறிப்பாக ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபம் முன்பாக, நாள்தோறும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பேரூந்துகளில் பயணிப்பதற்காக இவ்விடத்தில் காத்திருப்பதனைக் கருத்திற்கொண்டு தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி பிரதிநிதிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் மீன்பிடி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளருமான எஸ்.ஏ.எம். நஸீர் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி ஆகியோர், பஸ் தரிப்பிடம் அமையவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு அடையாளப்படுத்தும் உத்தியோகபூர்வ கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
குறித்த பஸ் தரிப்பிடம் அமைக்கும் பணிகள் நகர சபையின் கீழ் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும், காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளரான எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.
மேலும், காத்தான்குடி மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் நாட்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

