டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதி வேண்டி; காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு.!!!
(எம் எஸ் எம் நூர்தீன்)
டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதி வேண்டி காத்தான்குடியிலுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும், மாணவர்களின் நலனில் அக்கரைகொண்ட பெற்றோர்கள் சிலர் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று(19) திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் டில்ஷி அம்ஷிகா என்ற மாணவியின் தற்கொலை பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளதுடன் இந்த மாணவிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி காத்தான்குடியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கரைகொண்ட சில பெற்றோர்கள் கையொப்பமிட்ட மகஜரை காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு வருகை தந்த பெற்றோர்கள் சிலர் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களிடம் கையளித்தனர்.
மேலும் இந்த மகஜரில், பாடசாலை நிருவாகங்கள் மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்த வேண்டுமெனவும்,
அரசாங்கம் மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கான ஆலோசனை நிலையங்களை அனைத்து பாடசாலைகளிலும் உடனடியாக நிறுவ வேண்டுமெனவும்,
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிருவாகங்களின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாகக் கண்காணிக்கும் ஒரு தனி கண்காணிப்பு அமைப்பை அதிமேதகு ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் உருவாக்க வேண்டியும் கோரப்பட்டுள்ளது.
இந்த மகஜரின் பிரதிகள் ஜனாதிபதி பிரதமர் கல்வியமைச்சர் சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் பொலிஸ் மா அதிபர் என பலருக்கும் பிரதியிடப் பட்டுள்ளன.
இந்த மகஜரை பெற்றுக் கொண்ட காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த மகஜரை அனுப்புவதாக தெரிவித்தார்.

