காத்தான்குடி வாவி சுற்றுலா மேம்பாடு: மிதக்கும் படகு உணவகம் மற்றும் சவாரி சேவை ஆரம்பம்.!!!
காத்தான்குடி வாவியில் சுற்றுலா பயணிகளை கவரும் புதிய முயற்சியாக, மிதக்கும் படகு உணவகம் மற்றும் படகுச் சவாரி சேவைகள் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் தொடக்க விழா, நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகர சபை செயலாளர் நினோஸா முப்லி, பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம். ஜெஸீம், நகர சபை உறுப்பினர்கள், ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். மும்தாஸ் மதனி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், சமூக ஆர்வளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் கீழ், வாவிப் பகுதியில் உணவருந்தும் வசதியுடன் கூடிய மூன்று மிதக்கும் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
மேலும், இத்திட்டத்திற்கு சுற்றுலா அமைச்சின் ஊடாக 9.6 மில்லியன் ரூபா நிதி காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஆலோசனைக்கமைய காத்தான்குடி நகர சபையினால் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய திட்டங்கள் காத்தான்குடி பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.















