காத்தான்குடியில் – சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்; கையெழுத்துப் போராட்டம்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்ய கோரி, சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் இன்று (12) மாலை காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும், சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இப்போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட இணைப்பாளர் க.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டத்தில் சம உரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் தன்னே ஞானசார தேரர் மற்றும் சம உரிமை செயற்பாட்டாளர் ஏ.எல்.எம் சபீல் (நளீமி) மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிட்டதோடு, வீதியில் பயணித்தவர்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.









