காத்தான்குடியில் சுற்றுலாத்துறையை முழுமையாக அபிவிருத்தி செய்வேன்; ஊடக சந்திப்பில் – ஹிஸ்புழ்ழாஹ்!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பு நேற்று (16) காத்தான்குடி காரியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகர சபை உறுப்பினர்களான றுஸ்வின், ஹம்தூன், றிஸ்வி ஆகியோர் கலந்துகொன்டிருந்தனர்.
இதன்போது காத்தான்குடியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும், காத்தான்குடியின் சுற்றுலாத் துறையை விஸ்தரிப்பது தொடர்பாகவும் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினால் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்;
மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மிக அதிகப்படியான வாக்குகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் எனக்கும் அளித்து ஆணையைத் தந்திருக்கிறார்கள், அதேபோன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் மிக அதிகமான மக்கள் தங்களுடைய ஆதரவை வழங்கி காத்தான்குடி நகர சபை அதிகாரத்தை ஒப்படைத்து இருக்கிறார்கள். ஆகவே கடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் எல்லா தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் சொன்ன ஒரு விடயம் எதிர் வருகின்ற ஐந்து ஆண்டுகளிலே எங்களால் முடிந்த உச்சகட்ட அபிவிருத்திப் பணிகளை நாங்கள் மேற்கொள்வோமென குறிப்பிட்டோம் கிட்டத்தட்ட சுமார் 7 ஆண்டுகளில் அதாவது குண்டு வெடித்ததில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க அளவு அதற்கு பின்னர் எங்களால் வேலைகளை செய்ய முடியவில்லை. சிறிய சிறிய வேலைகளை செய்தாலும் எங்களால் திட்டமிடப்பட்டு அபிவிருத்திப் பணிகளை பிரதேசத்தில் மேற்கொள்ள முடியவில்லை.
ஆகவே அந்த நிலைமைகள் எல்லாவற்றையும் மாற்றி ஒரு புதிய நகரத்தை கட்டி எழுப்ப வேண்டும். நாளாந்தம் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்தான்குடிக்கு வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் எட்டு, பத்து நாட்களுக்குள் 80000 பேர் அளவில் எமது ஊருக்கு வருகை தந்திருக்கிறார்கள். ஆகவே தொடர்ந்தும் இதைவிட அதிகமாக வருகின்ற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான மலசல கூட வசதிகள், குளிப்பதற்கான வசதிகள், ஆடை மாற்றும் அறை, அவர்கள் ஓய்வெடுப்பதற்கான அறை, அவர்களுடைய வாகன தரிப்பிடங்கள், அவர்களுக்குரிய ஒழுங்குகள், இப்படி பல விடயங்களை நாங்கள் செய்ய வேண்டும். இது தொடர்பில் நான் இந்த சபை அமைத்ததிலிருந்து அதை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆகவே ஊரின் முன்னேற்றத்திற்காகவும், சமூக நலன்களுக்காகவும் நாங்கள் எடுக்கின்ற நல்ல விடயங்களுக்கு உங்களுடைய பூரண ஒத்துழைப்பை நீங்கள் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் நான் கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று காத்தான்குடி நகரசபையுடன் நல்ல உறவை நீங்கள் பேணிக் கொள்ள வேண்டும், அதேபோன்று நகர சபை எடுக்கின்ற நல்ல முயற்சிகளுக்கும், பணிகளுக்கும் உங்களுடைய பூரண ஒத்துழைப்பையும், உங்களுடைய ஆதரவையும் நீங்கள் வழங்க வேண்டும். ஏனென்றால் ஊடகவியாளர் என்பது கடந்த காலங்களைப் போல் அல்ல. இப்போது ஒரு பெரிய சக்தி, ஒரு சிறிய செய்தியை போட்டாலும் அதை ஆயிரக்கணக்கான மக்கள் ஐந்து, பத்து நிமிடங்களுக்குள்ளேயே போய் சேருகின்ற ஒரு மிகப்பெரிய சக்தியாக இப்பொழுது ஊடகம் இருக்கின்றது. மிகச்சிறிய ஊடகமாக இருந்தாலும் சரி மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கின்ற ஒரு அமைப்பாகத்தான் உலகவாளாவிய ரீதியில் மாறி இருக்கின்றது. ஆகவே இந்த சூழ்நிலைகளிலே உங்களுடைய பூரண ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் நீங்கள் தர வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
குறிப்பாக நாங்கள் காத்தான்குடி பிரதேசத்தை சுத்தமான ஒரு நகரமாக கட்டி எழுப்ப வேண்டும், இங்கு இருக்கின்ற பிரச்சினைகள், வீதி அபிவிருத்தி, அதேபோன்று ஆற்றங்கரை முழுமையான அபிவிருத்திக்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள், அது தொடர்பான நடவடிக்கைகளை நாங்கள் பல்வேறுபட்ட அமைச்சுகளின் ஊடாக மேற்கொண்டு வருகின்றோம், ஆற்றங்கரை லெகூன் டிரைவ் (Lagoon drive) என்ற ஒரு அபிவிருத்தி திட்டத்திலே நேற்று கூட பல அமைச்சுக்களின் உடைய அதிகாரிகள் வந்து எல்லாவற்றையும் பார்வையிட்டிருக்கிறார்கள். அதற்காக பல கோடி ரூபாய்களை நாங்கள் இப்போது ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். ஆகவே லெகுன் டிரைவ் (Lagoon drive) ஒரு பெரிய அபிவிருத்தியை காண இருக்கிறது. நாங்கள் எப்படி கடற்கரையை செய்தோமோ அதேபோல விளையாட்டு, பொழுதுபோக்கு, ஓய்வு நேரங்களை கழிப்பதற்கு தேவையான வசதிகள் போன்ற பல விளையாட்டு வசதிகள் என்று பல வசதிகளோடு லெகூன் டிரைவ் (Lagoon drive) இப்பொழுது அபிவிருத்தி அடைய இருக்கின்றது.
அதேபோன்று பல அபிவிருத்திப் பணிகளை நாங்கள் காத்தானுகுடியில் பல இடங்களிலே மியூசியம், அல் – அக்ஸா பள்ளிவாயல் வளாக பகுதி, கடற்கரை வளாகத்திலே மக்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள், பொதுமக்கள் வந்திறங்குகின்ற போது அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடுகள், மேலதிகமான மின் வசதிகளை செய்தல், வீதிகளை அபிவிருத்தி செய்தல், மரங்களை நாட்டுதல், திட்டமிடப்பட்டு பல அடையாளம் காணப்பட்ட வீதிகளுக்கு இரண்டு பக்கமும் பெரிய மரங்களை நாட்டுதல் போன்ற வேலைத்திட்டங்களை இப்போது நாங்கள் அலசி ஆராய்ந்து காத்தான்குடியி நகர சபையினுடைய கௌரவ தலைவர் தலைமையிலே உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு, என்னுடைய பூரண வழிகாட்டுதலோடு இந்தப் பணிகளை செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆகவே அந்த அடிப்படையிலேயே அதற்கான உங்களுடைய பூரண ஒத்துழைப்புக்களை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும்.
சில நாட்களாக சில ஊடக அறிக்கைகள் அல்லது சில செய்திகளை நான் பார்க்கக் கிடைத்தது. காத்தான்குடி மத்திய கல்லூரியினுடைய காணியை நாங்கள் கபலிகரம் செய்யப் போகிறோம், காணியை சுவீகரிக்கப் போகிறோம், காணியை எடுக்கப் போகிறோம் என்று. அந்த பேச்சுக்களை பார்க்கின்றபோது மொத்த மத்திய கல்லூரி உடைய காணிகளை ஏதோ நாங்கள் பறித்து எங்களுடைய குடும்பத் தேவைகள், சொந்தத் தேவைகளுக்கு பயன்படுத்துவது போன்று அந்த அறிக்கையில் அமைந்திருந்ததை நாங்கள் பார்த்தோம்.
உண்மையிலேயே நாங்கள் காத்தான்குடி கடற்கரை வீதியிலே கர்பலா வீதி சந்தையில் இருந்து விடுதி வீதி சந்தி வரையிலான அந்தப் பிரதேசத்தை அந்த வீதிக்கும் கடற்கரை வீதிக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியில் பெரிய பேரூந்து தரிப்பிடம், அதேபோன்று வாகன தரிப்பிடம், அதேபோன்று பல்வேறுபட்ட வசதிகள், அங்கு வருகின்றவர்களுக்கு தேவையான பொது மலசலகூட வசதிகள், குளிப்பதற்கு தேவையான குளியலறை வசதிகள், உடைகளை மாற்றுகின்ற அறை, பெண்கள் வருகின்ற போது அவர்களுடைய குழந்தைகளுக்கு பால் ஊட்டுவது இப்படியான பிரச்சனைகளை நாங்கள் அறிகிறோம். ஒரு பிள்ளைக்கு பால் ஊட்டுவதற்குக்கூட உரிய இடமில்லை. அவர்களுடைய வாகனம் கடற்கரையிலே நிறுத்தப்படுகிறது. இங்கே வருகிறவர்கள் பேரூந்தை நிறுத்த வசதி இல்லை இதனால் அதிக பிரச்சனைகளை நாங்கள் அடையாளம் கண்டோம். ஆகவே இது தொடர்பில் நாங்கள் சம்பந்தப்பட்ட பல அமைச்சுகளோடு தொடர்புகொண்டு அந்த காத்தான்குடி பிரதான கடற்கரை வீதியிலே இருக்கின்ற மத்திய கல்லூரியினுடைய எல்லை சுவரை அப்புறப்படுத்தி விட்டு அதற்கு பின்னால் ஒரு அழகான ஒரு சுவரை கட்டி அதிலே ஒரு தரிப்பிட வசதியை செய்ய வேண்டும் என நாங்கள் ஆலோசித்தோம். அந்த ஆலோசனையை நாங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் முன்வைத்து இருக்கிறோம். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடைய தலைவர்களும் இங்கு வந்து அதனை பார்த்துவிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மாவட்ட அதிகாரிகளை அவர்கள் அழைத்து அரசாங்க அதிபருக்கும் அவர்கள் அவர்களுடைய பிரச்சினைகளை சொன்னபோது நீங்கள் போய் காத்தான்குடியை பாருங்கள் என்றார். அவர் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி அவர்களுக்கு அங்கே நிறுவனத்தினுடைய தலைவர் அந்த கூட்டத்திலேயே நீங்கள் போய் எவ்வளவு தூரம் ஹிஸ்புல்லா மந்திரிதுமா எவ்வளவு வேலைகளை செய்ய திட்டமிடுகின்றார் இப்பொழுதே வாகன தரிப்பிட வசதிகளை செய்ய வேண்டும் என்று அவரிடம் எவ்வளவு நீண்டகால அடிப்படையில் ஒரு திட்டத்தை அவர் முன்வைத்து நிதி கேட்டார். ஆகவே இப்படி நீங்கள் திட்டங்களை தீட்ட வேண்டுமே தவிர வெறும் சிறுவர் பூங்கா கட்டுகின்ற திட்டங்களை நீங்கள் செய்யக்கூடாது என்று அவர்களுக்கும் ,அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அந்த கொழும்பிலே இருந்து வந்த அந்த சிங்கள தலைவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
ஆகவே அந்த ஆலோசனைகளை நாங்கள் முன் வைத்திருக்கிறோம். இது தொடர்பிலே கடந்த வாரம் என்னிடத்திலே வந்து அந்தப் பாடசாலையின் அதிபர், உத்தியோகத்தர்கள் எல்லோரும் எங்களுடன் மிகவும் நெருக்கமானவர்கள், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வந்து அதுதொடர்பாக கலந்துரையாடினார்கள். இதில் நகர முதல்வர், உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களிடம் ஒரு ஆலோசனை இருக்கிறது என்றும் அவர்களும் அதற்கு நானூறு மீட்டர் அதுவும் ஏற்கனவே நான் இப்படி ஒரு கிரவுண்ட் பெசிளிடிஸ், பார்வையாளர் அரங்கு அமைக்க வேண்டுமென்று நான் விடுத்த வேண்டுகோளின் பெயரிலேதான் அந்த பார்வையாளர் அரங்கு அமைக்க வேண்டுமென்று நான் கல்வித் திணைக்களத்திற்கு சொல்லி அதற்கான மதிப்பீடுகள் கணிப்பிடப்பட்டது. இருந்தாலும் எங்களுடைய சூழ்நிலைகளில் அவைகளை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆகவே இந்த நானூறு மீட்டர் மைதானம் அமைப்பதற்காக நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம். ஆகவே இப்படி இன்னும் ஒரு 12 அடி காணியை உள்ளே எடுக்கின்ற போது பாதிக்கப்படும் என்று சொன்னார்கள். நான் சொன்னேன் பிரச்சனை இல்லை இதனை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு ஏதாவது வழியிலே இதை செய்ய முடியுமா? என்ன செய்வது? எப்படி செய்வது? இதை முன்னால், பின்னால் அகட்டி செய்ய வாய்ப்பு இருக்கின்றதா அல்லது பார்வையாளர் அரங்கில் இருந்து அவர்கள் காட்டிய படத்திலே பார்வையாளர் அரங்கு இருக்கத்தக்கதாக அதற்குக் கீழே வாகன தரிப்பிடத்தை கட்டி கீழே 40, 50 கடைகளை கட்டுவதற்குத்தான் அந்த படத்திலே இருந்தது பெவிலியனுக்கு கீழே. அந்த கடையை கட்டினாலும் அதன் வருமானம் கொழும்பு கல்வி அமைச்சுக்குத்தான் போகும், ஒரு சதம் கூட பாடசாலைக்கு வராது. ஆகவே அப்படி இருந்தாலும் பெவிலியன் இருக்கத்தக்கதாக கீழே கட்ட முடியும் என்றால் நாங்கள் யோசிப்போம், ஆலோசிப்போம் என்று தான் சொல்லி அனுப்பினேன். அவ்வளவுதான் நான் சொன்னது அவர்களுக்கு. ஆனால் இது தொடர்பாக பெரிதொரு பிரச்சனையாக தூக்கி இந்த விஷயங்களை பார்த்திருக்கின்றார்கள். நான் ஒன்றை தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
உங்களுக்கு தெரியும் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தால் அந்த தீர்மானத்தை நாங்கள் கலந்து ஆலோசிப்போம். அது சமூகத்திற்கு நன்மை, ஊருக்கு நன்மை என்றால் அதை ஒரு நாளும் நாங்கள் பின்வாங்கியது கிடையாது. அதை நாங்கள் செய்து கொண்டே போவோம் அதுதான் எங்களுடைய வழக்கமான வேலை.
89 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையிலும் பல நான் பல அபிவிருத்திகளை செய்திருக்கிறேன் 93 ஆம் ஆண்டு காத்தான்குடி பிரதான வீதியை விரிவுபடுத்த முனைந்தபோது இதே பிரச்சினை, மீண்டும் 2009 ஆம் ஆண்டு காத்தான்குடி பிரதான வீதியை விரிவுபடுத்த முயன்ற போது ஆயிரம் க்கு மேற்பட்ட கடைகளை உடைக்க வேண்டி இருந்தது, கிட்டத்தட்ட 350 வழக்குகள் மட்டக்களப்பில் போடப்பட்டது நாங்கள் அவற்றை எல்லாம் மீறித்தான் இவைகளை செய்தோம்.
நான் முகநூலில் பார்த்தேன் ஒரு சகோதரர் அவர் ஒரு நளீமி அவர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதே நபர்தான் இதே நளீமிதான் 90 ஆம் ஆண்டும் எதிர்த்தவர், 93 இலும் எதித்தவர், எல்லா விடயத்திலும் எதித்தவர், காத்தான்குடி பிரதான வீதி அமைப்பதிலும் எதிர்த்தார், நூதன சாலை கட்டுகின்ற போதும் எதித்தார், ஹிஸ்புழ்ழா மண்டபம் கட்டுகின்ற போதும் எதித்தார், ஊர்வீதியை அபிவிருத்தி செய்கின்ற போதும் எதிர்த்தார்கள், இந்த ஊரிலே என்ன என்ன வேலைகளை செய்கின்றோமோ எதை செய்தாலும் எதிர்த்த அதே சகோதரர்கள் மீண்டும் இப்பொழுதும் அதனை அப்படி எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
காத்தான்குடி ஊர் வீதி அமைக்க போனபோதும் மூன்று பேர் நீதிமன்றம் போனார்கள். காத்தான்குடி பிரதான வீதி அமைக்க போன போதும் 350 வழக்குகள் நகர சபைக்கு எதிராக போடப்பட்டது. அதையும் தாண்டித்தான் நாங்கள் அதனை செய்தோம். ஆகவே காத்தான்குடி நூதனசாலையை திறக்கக் கூடாது என்று மூடி வைத்தார்கள். இதே கூட்டத்தார் கொழும்புக்கு போய். ஜம்இய்யதுல் உலமாவோடும் அங்கும் இங்கும் போய் கிடந்த இடமெல்லாம் பேசி அதனை மூடினார்கள். ஈச்சமரம் நாட்டுகின்ற போது கூட விமர்சனம், அல் – அக்ஸா பள்ளியை கட்டுகின்ற போது அதைவிட விமர்சனம், அல் அக்ஸா பள்ளிக்கு முன்னால் மேடையை போட்டே விமர்சித்தார்கள் பள்ளி தேவையா என்று, அவைகளை எல்லாம் தாண்டி அல்லாஹ்வின் உதவியோடு இந்த பணிகளை செய்துள்ளோம்.
காத்தான்குடி கடற்கரை வீதியை அபிவிருத்தி செய்த போது பிரச்சனை, எத்தனையோ வழக்குகள், ஆற்றங்கரையை செய்கின்ற போது பிரச்சனை அதற்கும் வழக்குகள் இவற்றையெல்லாம் தாண்டித்தான் நாங்கள் அபிவிருத்தி செய்துள்ளோம்.
நான் எந்த ஒரு வேலையையும், தொடங்கிய வேலைகளை விட்டு வைத்ததில்லை. அதுவும் நாங்கள் காத்தான்குடி மத்திய கல்லூரி தொடர்பாக விளையாட்டு துறைக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் 400 மீட்டர் அமைப்பதற்கு திட்டமிட்டோம். ஏனென்றால் காத்தான்குடி மத்திய கல்லூரி நான் படித்த பாடசாலை, இவர்கள் எல்லோரையும் விட அதிக அக்கறை எனக்கு இருக்கிறது. அங்கு இருக்கின்ற ஒரு கட்டிடத்தை தவிர, மற்ற அத்தனை கட்டடங்களும் என்னுடைய முயற்சியினால், நான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்கள். இப்பொழுது கூட அண்மையில் நான் back to school நிகழ்வுக்குப் போனபோது பிரதான பழைய கண்ணங்கர கட்டடத்தை பாரிய அளவிலே ஒரு கட்டிடமாக அதனை புணரமைப்பதற்கான முழு மதிப்பீட்டையும் எடுக்கச் சொல்லி, நான் கல்வி அமைச்சிடம் கேட்டு, நான் பிரதம அமைச்சருடன் பேசி அந்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நான் கடந்த வாரம் கூட சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கலந்துரையாடினேன்.
ஆகவே காத்தான்குடி மத்திய கல்லூரியை கபலி கரம் செய்வதென்பது யாரும் என்னிடத்தில் சொல்ல வேண்டியதில்லை. நாங்கள் தான் செய்து கொண்டிருக்கின்றோம். ஆகவே அறிக்கைகளின் படி இதில் எந்த பிரச்சனைகளும் இல்லை 400 மீட்டர் விளையாட்டு மைதானம் அமைக்க முடியும் அதற்கு பிரச்சினை இல்லை என்றால் நாங்கள் அதை சட்டப்படி எங்களுக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் சரி, யார் என்ன அறிக்கை விட்டாலும் சரி, எத்தனை சபை கூடினாலும் சரி, அதை எப்படி உடைப்பதென்றும் எங்களுக்கு தெரியும், எப்படி கட்டுவது என்றும் எங்களுக்கு தெரியும். அந்த வேலைகளை எப்படி செய்வதென்றும் எங்களுக்கு தெரியும். ஆகவே என்னுடைய அபிவிருத்திப் பணிகளை யாரும் இப்படி எல்லாம் விமர்சனம் செய்வதற்கு நான் பயந்து போனதும் இல்லை போகப் போறவனும் இல்லை.
ஆகவே தயவுசெய்து அரசியல் ரீதியில் அபிவிருத்திப் பணிகளை தடைசெய்யாதீர்கள். ஏனென்றால் இது ஒரு சந்தர்ப்பம் கடந்த ஏழு வருடமாக எந்த ஒரு அபிவிருத்தி பணிகளும் என்னால் செய்ய முடியவில்லை அதிகாரம் இல்லாமையினால். ஆகவே இந்த வேலைகளை எல்லாம் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதுதான் வேலை செய்ய வேண்டும். ஆகவே சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது இந்த வேலைகளை நாங்கள் செய்வதற்கு வேண்டுமென்று அரசியல் நோக்கத்திற்காக கால் புணர்ச்சியில் கடந்த 36 வருடமாக எதிர்த்து வருகின்ற அதே கூட்டம் இப்போது எதிர்த்து வந்தால் நான் 36 வருட அனுபவத்தோடு வந்திருக்கின்றேன், இந்த முறை பாராளுமன்றத்தில்.
அதேபோல் பத்து வட்டாரத்தையும் வென்று மேலதிகமாக ஒரு உறுப்பினரையும் 11 ஐயும் மக்கள் தந்திருக்கின்றார்கள் எங்களுக்கு. ஆகவே அதிகபட்ச ஆதரவையும் எங்களுக்கு தந்திருக்கின்றார்கள். ஆகவே இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் உதவியோடு நாங்கள் எல்லாவற்றையும் முகம் கொடுப்போம். அதில் எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது.
ஆகவே தயவு செய்து ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் நேரடியாக யாரும் பேசலாம். இது இல்லை பிரச்சனை இனித்தான் பிரச்சனை இருக்கிறது. இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது. இப்போது நாங்கள் லெகூன் டிரைவில் நிறைய வேலைகளை செய்ய போகின்றோம். அதற்காக காணி எடுக்கப்படும். அடுத்தது இன்னும் பல பிரச்சினைகள் இருக்கிறது. இன்னும் பல வேலை திட்டங்கள் இருக்கின்றது. உங்களுக்குத் தெரியும் அல் அமீன் வித்தியாலய பாடசாலைக்கு முன்னால் அந்த காணியை தராதிருந்தால் இன்று ஒரு மோட்டார் சைக்கிள் கூட நிறுத்த முடியாத நிலை உருவாகி இருக்கும். 30 அடியை அல் – அமீன் வித்யாலயம் தந்திருக்கின்றது பிரதான வீதியில் இருந்து. இதனால்தான் சுவரை கட்டிவிட்டு சின்ன ஒரு தரிப்பிடத்தை அமைக்க முடிந்தது.
இன்று பிரதான வீதியில், கடற்கரை வீதியில் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் காத்தான்குடிக்கு வருகின்ற போது எங்கு கொண்டுபோய் வாகனங்களை நிறுத்துவது. வருகின்றவர்களுக்கான வசதிகளை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இருப்பதற்குள் தான் எல்லாவற்றையும் செய்ய முடியும். புதிதாக எதனையும் தேடி கண்டுபிடிக்க முடியாது.
ஊரின் அபிவிருத்தி எப்படி முக்கியமோ அதுபோல காத்தான்குடி மத்திய கல்லூரி முக்கியம்தான். எனக்கு எல்லாமே முக்கியம்தான். நான் ஒன்றைப் பார்ப்பவன் அல்ல எல்லாவற்றையும் முக்கியமாக பார்ப்பவன். எல்லா அபிவிருத்தியும் முக்கியம்தான். ஆகவே அபிவிருத்தி என்று வரும்போது சில விடயங்களை வேண்டுமென்று யாரும் பிடிவாதமாக வந்தால் அதுக்கெல்லாம் எம்மிடம் இடம் கிடையாது, நீதி நியாயமாக இருந்தால் எந்த விடயத்தையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றோம்.
ஆகவே இப்படியான பல வேலைத் திட்டங்களை நாங்கள் இன்ஷா அல்லாஹ் செய்ய இருக்கின்றோம். ஆகவே நீங்களும் காத்தான்குடியை நேசிக்கின்ற ஊடகவியலாளர்கள், ஆகவே நீங்களும் பூரண ஒத்துழைப்பு தர வேண்டும். ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தால், எந்த ஊடகவியலாளர் கேட்டாலும் அவர்களுக்கு நேரம் தந்து விளக்கங்களை தர நான் ஆயத்தமாக இருக்கின்றேன். நல்ல விடையங்கள் நல்ல அபிவிருத்திகளுக்கு நீங்கள் தான் ஒத்துழைப்பு தர வேண்டும். இது எமது ஊர் கட்டாயமாக எமது ஊரை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆகவே நல்ல விடயங்களுக்கு நீங்கள் உங்களுடைய பூரண ஒத்துழைப்பை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார்.