காத்தான்குடியில் மக்களுக்கு வழங்கிய ஆணை நடைபெறுகிறது; வேதனத்தை மக்களுக்கு வழங்கிய உறுப்பினர்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி நகர சபை தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் போட்டியிட்ட அப்துல் மஜீத் முகம்மது பர்ஸாத் தமது உள்ளூராட்சி சபை உறுப்பினருக்காக வழங்கப்படுகின்ற மாதாந்த வேதனத்தை முழுமையாக மக்களுக்கு வழங்கிய சம்பவம் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் பதிவாகி இருக்கிறது.
மேற்படி உறுப்பினர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காத்தான்குடி நகர சபை தேர்தலில் அல் அக்ஸா வட்டாரத்தில் போட்டியிட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊடாக பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அவரால் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதியான தனது சம்பளப் பணத்தை முழுமையாக மக்களுக்காக செலவிடுவேன் என்கின்ற உத்தரவாதத்திற்கு அமைய அவருடைய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதற்கு அமைய கடந்த இரண்டு மாதங்களாக தனக்கு வழங்கப்பட்ட நகர சபை உறுப்பினருக்கான இருமாத கொடுப்பனவையும், புதிய காத்தான்குடி ஜெய்லானி கிராமிய மீனவர் கடற்தொழில் அமைப்புக்கு முழுமையாக வழங்கி தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
குறித்த மீனவர் அமைப்பின் செயலாளர் அஸ்மி தலைமையில் இன்று (06) ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் தனது இரு மாத சம்பளங்களுக்கும் கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகள் குறித்த மீனரவைப்புக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீனவர் அமைப்பின் உறுப்பினர்கள், சமூக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

