அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் அதிரடி மாற்றம்: புதிய ஓய்வூதியத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.!!!
2016 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரச சேவையில் இணைந்த ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு தீர்வாக, புதிய ஓய்வூதியத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டு பாதீட்டுத் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், 01.01.2016 இற்குப் பின்னர் அரச சேவையில் இணைந்த ஊழியர்களின் நியமனக் கடிதங்களில், “அரசின் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு இணங்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் ஓய்வூதிய ஏற்பாடு சேர்க்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதற்கான புதிய ஓய்வூதிய முறை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
இந்த நிலையில், தற்போதுள்ள ஓய்வூதிய முறையின் கீழ் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டு பாதீட்டுத் திட்டத்தின் மூலம் நியமனக் கடிதங்களில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2016.01.01 இற்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் நியமனக் கடிதங்களில் இனி,
“இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவைகள் மற்றும் தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு (Widows & Orphans Pension – W&OP) பங்களிப்புத் தொகை செலுத்தப்பட வேண்டும்”
எனத் தெளிவாக குறிப்பிடப்படும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீர்மானம் மூலம், 2016 இற்குப் பின்னர் அரச சேவையில் இணைந்த ஊழியர்களிடையே நிலவி வந்த ஓய்வூதிய குறித்த குழப்பங்கள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அரச ஊழியர் சமூகத்தில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.