இலங்கை அஞ்சல் துறையில் பாரிய மறுமலர்ச்சி: 2025 இல் இலக்கை விஞ்சிய 13,100 மில்லியன் ரூபாய் வருமான சாதனை.!!!
நீண்ட காலமாக போதிய கவனமின்றி புறக்கணிக்கப்பட்டிருந்த இலங்கை அஞ்சல் துறை, கடந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. திறைசேரியினால் 2025 ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை விட மேலதிகமாக 13,100 மில்லியன் ரூபாய்களை ஈட்டி, அஞ்சல் துறை புதிய சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார்.
அஞ்சல் துறையின் செயல்திறன், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் விளைவாக இந்த வருமான உயர்வு சாத்தியமானதாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக, 378 உப தபால் அதிபர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 1,000 அஞ்சல் உதவியாளர்களின் பணிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதுடன், தகுதியுடைய 731 பதில் ஊழியர்களும் அஞ்சல் துறையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மேலும், 600 புதிய அஞ்சல் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் சேவைகளை வினைத்திறனாக மாற்றும் நோக்கில் 225 கணினிகள், உப தபால் அதிபர்களுக்காக 1,500 டேப் (Tab) கணினிகள் மற்றும் 500 அச்சுப்பொறிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் 600 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. தம்புள்ளை உள்ளிட்ட 14 பகுதிகளில் புதிய தபால் நிலையக் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் புதிய கட்டிடங்களும், சுற்றுலா விடுதிகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
அஞ்சல் விநியோகத்தை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில் 10 பெரிய லொறிகள் மற்றும் 20 புதிய க்ரூ கேப் (Crew Cab) வாகனங்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
மேலும், சர்வதேச நிதி உதவியுடன் (QSF & USPS) 35 மின்சார முச்சக்கர வண்டிகளும், 165 மின்சார மோட்டார் சைக்கிள்களும் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் தலைமையகம், பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு அஞ்சல் வளாகங்களில் சூரிய சக்தி மின்சாரத் தகடுகள் பொருத்தப்பட்டு, மின்சாரத் தேவைகள் பசுமை வலுசக்தி ஊடாக பூர்த்தி செய்யப்படுவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மறுமலர்ச்சி நடவடிக்கைகள் மூலம் இலங்கை அஞ்சல் துறை, நவீனமும் வருமானமிக்கதுமான அரச சேவையாக உருவெடுத்து வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.