மத்திய கிழக்கு பதற்றம்: மட்டக்களப்பில் எரிபொருள் நிலையங்கள் முன் மக்கள் நீண்ட வரிசை – தட்டுப்பாடு அச்சம்.!!!
– எம்.ரி.எம்.யூனுஸ் –
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஓட்டமாவடி, ஏறாவூர், மட்டக்களப்பு நகர்ப்பகுதி, அரசடி, காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று முதல் மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
பெற்றோல் பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அதிகளவில் வரிசையில் காணப்பட்டதுடன், டீசல் பெற்றுக்கொள்ள கனரக வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சில இடங்களில் பல மணிநேரங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், நாட்டில் தற்போதைக்கு போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமித்து வைக்காமல், அமைதியாக செயல்படுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





