மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – உதுமாலெப்பை கோரிக்கை.!!!
(கே எ ஹமீட்)
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.எம்.ஜீ.எஸ்.நாலக களுவெவவிடம் கோரிக்கை!
அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.எம்.ஜீ.எஸ்.நாலக களுவெவ ஆகியோருக்கிடையில் சந்திப்பு நேற்று (21) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை
நமது நாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் 1992 ம் ஆண்டு 295 மௌலவி நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன் பிறகு 18 வருடங்கள் கழித்து 2010 ம் ஆண்டு 120 மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
15 வருடங்கள் சென்ற நிலையில் இதுவரையும் நமது நாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாத நிலைமை தொடர்கின்றன. இதனால் நமது நாட்டில் முஸ்லிம் பாடசாலைகளில் மௌலவி ஆசிரியர் பற்றாக்குறையுடன் செயற்பட்டு வருகின்றன. எனவே ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது இலங்கையில் மௌலவி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.எம்.ஜீ.எஸ்.நாலக களுவெவவிடம் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை;
நமது நாட்டில் 321 அரபுக்கல்லூரிகள் இலங்கை கலாசார அமைச்சினால் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டு வருகின்றன. இவ் அரபுக்கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு வருடமும் சுமார் 500 க்கும் மேற்பட்ட மௌலவிமார்கள் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். பட்டம் பெற்று வெளியேறிய மௌலவிமார்களில் பட்டங்களை நிறைவு செய்ததுடன் GCE O/L, GCE A/L பரீட்சைகளில் தோற்றி சித்தி அடைந்துள்ளனர். அத்துடன் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட அல்-ஆலிம் ஆரம்பப் பகுதி, இறுதிப் பகுதி பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளனர். நமது நாட்டில் உள்ள பாடசாலைகளில் அரபு, இஸ்லாம் பாடத்திற்கு வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. இவ் வெற்றிடங்களுக்கு முதல் கட்டமாக ஒரு தொகை மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் 2020 ம் ஆண்டுக்குப் பிறகு நடாத்தப்படாமல் உள்ள அல்-ஆலிம் பரீட்சையினை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.எம்.ஜீ.எஸ்.நாலக களுவெவ…
எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் போது மௌலவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக கருத்தில் கொள்வதாகவும் அல்-ஆலிம் பரீட்சை நடாத்துவது குறித்து மேல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.