அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு மையத்துடன் இணைக்கும் தேசிய செயற்பாடு ஆரம்பம்.!!!
நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் (NCSOC) உடன் இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் தேசிய செயற்பாடு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை CERT நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடலில், சைபர் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப விடயம் மட்டுமல்ல; அது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை நேரடியாக பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், தகவல் உட்கட்டமைப்புகளை செயற்படுத்தும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும், சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தின் ஊடாக அரசின் முக்கிய தகவல்களை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏனைய அரச நிறுவனங்களையும் சைபர் பாதுகாப்பு மையத்துடன் இணைக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
முதற்கட்டமாக முன்னணி அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், அவற்றை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கணக்காய்வுக்கு உட்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், அனைத்து அரச அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும், அதற்கான முறையான பயிற்சித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில், சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் அரச நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலின் அடிப்படை அங்கமாக கருதப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. அரச இணையதள ஊடுருவல்கள், ரென்சம்வேர் தாக்குதல்கள் மற்றும் தகவல் திருட்டு போன்ற அச்சுறுத்தல்களால் அத்தியாவசிய சேவைகள் முடங்குவதைத் தடுக்கவும், அவற்றை நிர்வகிக்கவும் இந்த புதிய பொறிமுறை வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தின் ஊடாக, அரச நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அச்சுறுத்தல்களை கண்காணித்தல், முன்கூட்டிய எச்சரிக்கைகள் வழங்குதல் மற்றும் ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வசதிகள் கிடைக்கின்றன. இதன் மூலம், இது ஒரு நடைமுறைச் செயல்பாடு மட்டுமல்ல; நிறுவன ரீதியான நம்பகத்தன்மைக்கான முக்கிய முதலீடு என்றும் அடையாளப்படுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபால, இலங்கை CERT நிறுவனத்தின் தலைவர் திலக் பத்திரகே, பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி கனிஷ்க கருணாசேன, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அத்துடன் முக்கிய தகவல் உட்கட்டமைப்புகளை செயற்படுத்தும் என அடையாளம் காணப்பட்டுள்ள 37 அரச நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.




