நேபாள பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள்: இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு கல்வி சுற்றுப்பயணம்.!!!
(கற்பிட்டி நிருபர்: சியாஜ்)
இலங்கையில் கல்வி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் பணியாளர் பாடநெறியில் பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்கள் அடங்கிய உயர்மட்ட அதிகாரிகள் குழு, திங்கட்கிழமை (19) இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டது.
இந்த அதிகாரிகள் குழுவிற்கு நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் பிரிகேடியர் ஜெனரல் பூர்ம பகதூர் கட்ரி (Purna Bahadur Khatri) தலைமை தாங்கினார்.
விஜயத்தின் போது, பிரிகேடியர் ஜெனரல் பூர்ம பகதூர் கட்ரி மற்றும் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில், இருதரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மற்றும் பயிற்சி சார்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.
மேலும், இலங்கை கடற்படை தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட அமர்வின் போது, நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையின் பங்கு, கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் அதன் முக்கியத்துவம் குறித்து கடற்படையின் தலைமை அதிகாரி விரிவாக விளக்கினார்.
இந்த கல்வி சுற்றுப்பயணம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்பு சேவைகளுக்கிடையிலான ஒத்துழைப்பையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.



