ஓட்டமாவடி தவிசாளர் மற்றும் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – அமீர் அலி.!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர் அலி அவர்களின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பு இன்று (19) மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்றை நிலையத்தில் இடம்பெற்றது.
குறித்த ஊடக மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர் அலி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராகவும் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியும் கட்சி யாப்புக்கு விரோதமாகவும் கட்சி மாறி தவிசாளரான பைரூஸ் உட்பட, சில இடங்களில் இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்ககாற்று நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை கோயிலை இடித்து இறைச்சிக் கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகமும் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டை சுமத்தியிருந்தவர்கள் அவரோடு கைகோர்த்து இந்த ஆட்சியைக் கைப்பற்றியது பாராட்டத்தக்கது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி சின்னத்திலே போட்டியிட்டோம்.
இதில் 8 வட்டாரங்கனை நாங்கள் வென்றோம். அதனோடு போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு வட்டாரங்களை வென்றதுடன் 4 போனஸ் ஆசனங்களை பெற்றது. அதேவேளை தேசிய மக்கள் சக்திக்கு இரண்டு ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும், இலங்கை தமிழரசு கட்சிக்கு ஒரு ஆசனமும், சுயேச்சைக்குழு ஒன்றிற்கு ஒரு ஆசனம் உட்பட 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் யூன் 16ம் திகதி சபை அமர்வு இடம்பெற இருந்த நிலையில் அன்றைய தினம் எனது கட்சிக் காரியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கட்சி எவ்வாறு சொல்லியுள்ளதோ அதன் அடிப்படையில் தவிசாளராக கலால்தீன் பிரதி தவிசாளராக அன்சார் ஆகவேண்டும் என்ற அடிப்படையில் கட்சி எடுத்துக் கொண்ட தீர்மானத்தை அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தினேன்.
இதன்போது தற்போது ஓட்டமாவடி பிரதேச சபையினுடைய தவிசாளர் பைரூஸ் அந்த கூட்டத்திலே தொடர்ந்து கலந்து கொண்டார். காலை 10 மணி தொடக்கம் இடம்பெற்ற அந்த கூட்டத்தை பகல் போசனத்துக்காக அதாவது ஓரே சகனில் 6 பேர் இருந்து சாப்பிடும் போது தற்போதைய பிரதேச சபை தவிசாளரும் இருந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் இரண்டாவது அமர்வாக தெளிவாக பேசினேன் அதில் கட்சி பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டவரை தவிசாளராகவும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்வது என தெரிவித்தேன்.
இதன்போது ஒட்டு மொத்தமாக 9 பேரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன் எனது கையில் பைரூஸ் உட்பட அனைவரும் சத்தியம் செய்துவிட்டு சென்றனர். அதே நேரத்தில் தவிசாளரான பைரூஸ் சாப்பிட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வருகின்றேன்; என ஓடோடிச் சென்று அங்கு சென்று அவர்களுக்கு உடன்பாடு தெரிவித்து கட்சி மாறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தமிழரசுகட்சியுடன் கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றினார். அதில் எனக்கு வியப்பான விடையம் ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சிக்கடை கட்டியது எனவும், மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டை சுமத்தியிருந்த போதும் கூட இலங்கை தமிழரசுக் கட்சி அவரேடு கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றிய பணியை செய்திருப்பது பாராட்டத்தக்கது.
இருந்தபோதும் அப்படியான நிலையில் அவர்கள் உள்ளார்ந்த ரீதியாக எங்களுடைய கட்சி உறுப்பினராக இருந்த பைரூஸை தவிசாளராக்கி பிரேரணை கொண்டுவந்து ஒரு அருவருப்பான முறையிலே சபையை வழிநடாத்தியுள்ளனர்.
எனவே எங்கள் கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டதுடன் சத்தியத்தை மீறி கட்சியின் கட்டுக்கோப்பை மீறி கட்சி யாப்புக்கு விரோதமாக தவிசாளராக வந்திருப்பது சட்ட விரோதமானது. எனவே கட்சியின் ஒழுக்ககாற்று குழு மிகவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன் அவர் மாத்திரமல்ல நாட்டிலே எங்கள் கட்சிக்குள் சில இடங்களில் இவ்வாறு இடம்பெற்றதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிரா ஒழுக்ககாற்று நடவடிக்கை எடுக்கும் என்றார்.