மட்டக்களப்பில் தொடரும் கொலை மற்றும் நகைக்கொள்ளை பரபரப்பு: சந்தேகநபர்கள் 4 நாட்கள் காவலில் விசாரணை.!!!
மட்டக்களப்பில் நடந்த தொடர்ச்சியான பெண் கொலை மற்றும் நகைக்கொள்ளை சம்பவங்களுக்கு தொடர்புடைய சந்தேகநபர்களை நான்கு நாட்கள் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பின்னர் அவர் கொக்கட்டிச்சோலை – நெல்லியடி வயல் பகுதியில் உள்ள கிணற்றில் வீசப்பட்டதாக தெரியவந்தது. அதே கிணற்றிலிருந்து முன்னதாக காணாமல் போன மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டதால் மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி. மேனன் தலைமையிலான போலீஸ் குழுவினர் மேற்கொண்ட அதிரடி விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய சந்தேகநபர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று (23) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு, நீதவான் அண்ணாத்துறை தர்சினியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பிரதான சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு பொலிஸ் காவலில் வைத்துக் கொள்ள விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டதோடு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கொள்வனவு செய்ததாகக் கருதப்படும் இரு சந்தேகநபர்களை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை அறிக்கை மற்றும் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.