தனது மாதச் சம்பளத்தை பாடசாலைக்கு ஒப்படைத்தார்; முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம்.!!!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரான முஹம்மத் சாலி நளீம் தனது நேரடி அரசியல் பயணத்தில் அதற்காக கிடைக்கும் கொடுப்பனவுகளை தனக்கென பாவிக்காது மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை அவர் உள்ளூராட்சிமன்ற உறுப்பினராக ஆரம்பித்தது முதல் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலை வரை முன்னெடுத்து வருகிறார்.
அந்த வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்ட பின் தனது முதலாவது சம்பளம் மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை கல்குடா பிரதேசத்திற்கு வழங்கி வைத்த அவர், கடந்த மாதக் கொடுப்பனவு 225,000 ரூபாயை ஏறாவூரின் கல்விக்கண் என அடையாளப்படுத்தும் அலிகார் தேசிய பாடசாலை காணி விவகாரங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் பொருட்டு பாடசாலை மாணவர்கள், நிருவாகம் என்பவற்றின் பங்கேற்புடன் பழைய மாணவர் சங்கப்பிரதிநிதிகளிடம் கையளித்தார்.
பாடசாலை அதிபர் எம்.எம்.மௌஜூத் தலைமையில் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கலந்து கொண்டு குறித்த சம்பளப்பணத்தை பாடசாலை காணி மற்றும் அதனோடு தொடர்பான விபரங்களைக் கையாளும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் வழங்கி வைத்தார்.
இதன்போது பாடசாலை நிருவாகம் , பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், காணி விவகாரக்குழு , நாடாளுமன்ற உறுப்பினரின் அபிவிருத்திக்குழுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


