விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்: பிரதி அமைச்சரிடம் கையளிப்பு.!!!
(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)
கற்பிட்டி ஆலங்குடா பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சரிடம் சனிக்கிழமை (14) நேரடியாக கையளிக்கப்பட்டது.
ஆலங்குடா பிரதேச விவசாயிகளின் சார்பில், ஆலங்குடா பிரஜா சக்தி அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த மகஜர் கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆலங்குடா பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மின்சார வசதி குறைபாடு, நிலத்தடி நீர் பாதுகாப்பு, விவசாய உபகரணங்களின் தேவைகள், மண் பரிசோதனை மையம் அமைத்தல், விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டம் மற்றும் ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விவசாயத் தோட்டங்களுக்கு செல்லும் வீதிகளை சீரமைத்தல் போன்ற முக்கிய தேவைகளும் இம்மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆலங்குடா பிரதேச விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அரசாங்கம் விரைவான தீர்வுகளை வழங்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ் மற்றும் உப தலைவர் சமன் குமார ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
