ஹட்டன் குடாகம வனப்பகுதியில் திட்டமிட்ட தீ வைப்பு: அரிய உயிரியல் வளங்கள் அழிவின் விளிம்பில் – பொதுமக்கள் கடும் கண்டனம்.!!!
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம புகையிரத பாதைக்கு அண்மையிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று (25) மாலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தத் தீ வைப்பு சம்பவத்தால் பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி முற்றிலும் தீக்கிரையாகியுள்ளதாக பிரதேசவாசிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
இந்தத் தீ விபத்தினால் இலங்கைக்கே உரித்தான அரிய வகை மூலிகைச் செடிகள், பல்வேறு தாவர இனங்கள் மற்றும் சிறிய உயிரினங்கள் அழிந்திருக்கக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தற்போது நிலவும் வறட்சி நிலை காரணமாக காடுகளுக்கு தீ வைப்பது அப்பகுதியிலுள்ள நீரூற்றுகள் வற்றிப் போகும் அபாயத்தை அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காடுகள் அழிவடைந்தால், சிறுத்தைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகள் உணவு தேடி மனிதக் குடியிருப்புகளுக்குள் நுழையும் அபாயமும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்திற்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ சமூக விரோதிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இயற்கையைச் சீரழிக்கும் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். வனப்பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

