வறுமை ஒழிப்பை நோக்கி ‘பிரஜா சக்தி’: நாளை அலரிமாளிகையில் தேசிய விழிப்புணர்வு நிகழ்வு.!!!
வறுமை ஒழிப்புக்கான தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சமூக அபிவிருத்தி சபை பிரதிநிதிகளை விழிப்புணர்வூட்டும் தேசிய மட்ட நிகழ்வு நாளை (13) செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
இதில், நாடு முழுவதும் உள்ள 14,008 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்தி சபை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில், மேல் மாகாணத்தைச் சேர்ந்த சமூக அபிவிருத்தி சபை செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான விசேட விழிப்புணர்வு அமர்வும் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னில தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில்,
ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சமன் குமநாயக்க,
கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க,
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார,
மேல் மாகாண மாவட்ட செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் மூலம், சமூக அடிப்படையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை வலுப்படுத்தி, வறுமை ஒழிப்பு நோக்கங்களைச் செயல்படுத்துவதே முக்கிய இலக்காகும்.