கிழக்கில் மழை தீவிரம் பெறலாம் – வடக்கிலும் பரவ வாய்ப்பு: வானிலை முன்னறிவிப்பு.!!!
தற்போது கிழக்கு மாகாணத்தில் குறைந்து காணப்படும் மழைவீழ்ச்சி அடுத்துவரும் மணித்தியாலங்களில் தீவிரமடையக்கூடும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்திலும் மழை விரிவடைய வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் அரேபிய கடல் நோக்கி நகர்ந்து வருகின்றது. இதன் தாக்கத்தால் கிழக்கு மாகாணத்தில் தற்போது குறைந்து காணப்படும் மழை அடுத்த சில மணித்தியாலங்களில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த தாழ்வு பகுதி நாளையதினம் இலங்கையின் வடக்கு மாகாணம் வழியாக வெப்ப நீராவி நிறைந்த கிழக்கு காற்றை ஈர்க்கும் என்பதால், மழைவீழ்ச்சி யாழ்ப்பாணம் வரை விரிவடையக்கூடும் என கணிக்கப்படுகிறது.
அத்துடன், தென்கிழக்கு வங்காளவிரிகுடா பகுதியில் இந்துனேசியா அருகே உருவாகியுள்ள புதிய காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணித்தியாலங்களில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பை அணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு மாகாணம் முழுவதும் அடுத்த மூன்று நாட்கள் இடையிடை மழையுடன் கூடிய வானிலை நிலவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சுழற்சி வலுவடைந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமை (02) அளவில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குக் கரையோர மாவட்டங்களில் 50 மில்லிமீட்டர் வரையான குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் கணிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, வடக்கில் நெல் அறுவடை மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செயற்பாடுகளை திட்டமிட்டு மாற்றியமைத்துக் கொள்ளுவது பாதுகாப்பானதாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
19.02.2026 – 01.30 பிற்பகல்
செந்தில் குமரன்