கல்விச் சீர்திருத்த விவகாரத்தில் திறந்த கலந்துரையாடலுக்கு தயார் — பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.!!!
● தேவையற்ற இணையதளங்களைப் பிரபல்யப்படுத்த வேண்டாம்.
கல்விச் சீர்திருத்தம் தொடர்பான கருத்திட்டப் பத்திரம் குறித்து விரிவான கலந்துரையாடல்களுக்கு அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எனினும், இந்த விவகாரத்தை முன்னிறுத்தி தேவையற்ற இணையதளங்களையும் தவறான தகவல்களையும் பிரபல்யப்படுத்துவதில் சிலர் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
6ஆம் தர ஆங்கில பாடத்திற்கான மொடியூலில் (Module) இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பாடம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் கூறினார். குறித்த பாடம் முழுமையாக நீக்கப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மொடியூல் இதுவரை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த விவகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாகச் சபையே (National Institute of Education – NIE) இச்சம்பவம் தொடர்பான ஒழுக்கம் மற்றும் நிர்வாகப் பொறுப்புக்கூறலை ஏற்க வேண்டிய நிறுவனம் எனவும் வலியுறுத்தினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே, முன்னதாக அறிவித்ததற்கு அமைவாக அந்தப் புத்தகங்கள் முத்திரையிடப்பட்டதாகவும், மாணவர்களுக்கு எந்த வகையிலும் அவை விநியோகிக்கப்படவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தம் என்பது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய விடயம் என்பதால், அது பொறுப்புடன், வெளிப்படைத்தன்மையுடன் மற்றும் சமூக கலந்துரையாடல்களின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.