விமான கட்டணங்கள் இருமடங்காக உயரும் அபாயம்.!!!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களின் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இலங்கையில் விமான கட்டணங்கள் முந்தைய அளவைக் காட்டிலும் இருமடங்காக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு கலன் விமான எரிபொருளின் விலை 2.25 அமெரிக்க டொலரிலிருந்து சுமார் 4 டொலர் வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த திங்கட்கிழமை (16) நிலவரப்படி, இலங்கையில் 28 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு காணப்பட்ட நிலையில், தற்போது அது சுமார் 21 நாட்களுக்கு மட்டுமே உள்ளதாகவும் கூறப்பட்டது.
எனினும், வரவிருக்கும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஒரு எரிபொருள் கப்பலும், ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் மேலும் ஒரு கப்பலும் வரவிருப்பதால், எரிபொருள் விநியோகத்தில் உடனடி தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக SriLankan Airlines நிறுவனத்திற்கு கடுமையான நிதி நெருக்கடி உருவாகியுள்ளதாக அதன் பதில் தலைமை நிர்வாக அதிகாரி வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவுகளில் எரிபொருள் முக்கிய பங்காற்றுவதால், அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளமை நிதித் திட்டமிடலில் பாரிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பழைய விலையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்காக கூடுதல் கட்டணங்களை வசூலிக்க இயலாததால், நிறுவனங்களுக்கு நட்டநிலை உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.