பகிடிவதையில் ஈடுபட்ட 22 மாணவர்கள் இடைநீக்கம்; இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் – அதிரடி முடிவு.!!!
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட பொறியியல் பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 22 பேர், கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்த இந்த பகிடிவதைச் சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடந்த 19 ஆம் திகதியே முறைப்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்தே பல்கலைக்கழக நிர்வாகம் இம்மாணவர்களை வகுப்புக்களிலிருந்து இடைநீக்கியுள்ளது.
காணொளியில் நன்கு அடையாளம் காணப்பட்ட மாணவர்களே கல்வி நடவடிக்கைகளிலிருந்து இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து உள்ளக விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் இம்மாணவர்கள் 22 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக, அக்கரைப்பற்று பொலிஸார் தனியான குற்றவியல் விசாரணைகளையும் தொடங்கியுள்ளனர்.
இதற்கிணங்க சம்பந்தப்பட்ட மாணவர்களின் வாக்குமூலங்கள் நேற்று (24) முதல் பதிவு செய்யப்பட்டதாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்படவுள்ளனர். அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் – இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.