இலங்கை பொலிஸ்: பொதுமக்களுக்கு அவசர பாதுகாப்பு அறிவிப்பு.!!!
● பொருளாதார நெருக்கடி மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் அபாயம் – விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு குற்றச்செயல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக இலங்கை பொலிஸ் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பொது இடங்களில் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சந்தேகத்திற்குரிய நபர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதுடன், விலை உயர்ந்த பொருட்களை வெளிப்படையாக அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தங்க நகைகள், விலை உயர்ந்த கடிகாரங்கள் போன்றவற்றை பொதுமக்கள் இடங்களில் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
மேலும், கைபேசி மற்றும் மின்னணு சாதனங்களை பொது இடங்களில் தேவையற்ற முறையில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வாகனங்களில் பயணம் செய்யும் போது கதவுகளை பூட்டி வைத்திருப்பதுடன், அறிமுகமில்லாத நபர்களை ஏற்றிக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மற்றும் வங்கி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், தேவைக்கு அதிகமாக பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து பயண விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல் முக்கியம் எனவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டு பாதுகாப்பு தொடர்பிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. கதவு மணி அடிக்கும் போது யார் என்பதை உறுதி செய்த பின் மட்டுமே கதவை திறக்க வேண்டும். கிரில் கதவுகள் இருந்தால் அவற்றை பூட்டியவாறு வைத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பயணங்களின் போது தனிமையான சாலைகள் மற்றும் குறுக்குவழிகளை தவிர்த்து, வெளிச்சம் நிறைந்த பிரதான வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடகை வாகன சேவைகளை பயன்படுத்தும் போது பயண விவரங்களை நம்பகமானவர்களுடன் பகிர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அதிக பாதுகாப்பு கருதி காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வெளியே செல்வதை மட்டுமே முன்னுரிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணம் கோரும் சந்தேக நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், சந்தேக நிலை ஏற்பட்டால் உடனடியாக பொலீசாருக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முடிவில், இந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தனிநபர் மற்றும் குடும்ப பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என பொலீசார் தெரிவித்துள்ளனர்.