சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை.!!!
சட்டவிரோதமாகவும் ஆபத்தான வகையிலும் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆபத்தான உபகரணங்களைப் பொருத்தி, போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய அனைத்து வகை வாகனங்களுக்கும் எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட பின்னர் காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது, காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராக “கொலை முயற்சி” குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பையும், சாலை ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத மாற்றங்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கடும் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.