கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால்: மட்டக்களப்பில் இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி.!!!
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடகப் பயிற்சி கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல் தலைமையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் சனிக்கிழமை (14) இடம்பெற்றது.
இலங்கையில் பல சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் அகிலன் பவுண்டேசன் அமைப்பின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இளம் ஊடகவியலாளராக உருவாக்கும் எண்ணக்கருவுக்கமைய இப்பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது செய்தி எழுதுதல், ஊடக தர்மம், போலிச் செய்திகளைக் கண்டறிதல் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற முக்கியமான தலைப்புகளில் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சி நெறியின் இறுதியில் சான்றிழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளர்களான எல்.தேவஅதிரன், கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் அருள்.சஞ்ஜீத், ரி.எல்.ஜௌபர்கான், வ.துசாந்தன், வ.சக்திவேல், ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
சான்றிதழ் வழங்கும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி மா.சசிகுமார், மண்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர் திருமதி ராதிகா கருணாகரன், அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.









