ஒட்டமவாடி மயானத்திற்கு போக்குவரத்து வசதி: கொழும்பு மாநகர சபையில் தீர்மானம்.!!!
-நூருல் ஹுதா உமர்-
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்து ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துமாறு கோரி முன்வைக்கப்பட்ட தீர்மானம், கொழும்பு மாநகர சபையின் மாதாந்திரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் கலிலூர் ரஹ்மான் முன்வைத்தார். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆதிஃப் அவர்களால் வழிமொழியப்பட்ட இத்தீர்மானம் பின்னர் சபையில் அங்கீகரிக்கப்பட்டது.
கொரோனா சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள், கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் கொரளைப்பத்து மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்களில், கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட குடிமக்களும் அடங்கியுள்ளனர்.
இஸ்லாமிய சமய மரபின்படி, கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை மற்றும் பிற சமயச் சடங்குகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். குறிப்பாக ரமலான் மற்றும் ஹஜ் போன்ற விசேஷ காலங்களில் இந்த தேவையானது அதிகரிக்கிறது.
இதனை முன்னிட்டு, பெருநாளுக்கு அடுத்த முதல் சனிக்கிழமையன்று மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ற நாளொன்றில், போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாநகர சபையிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய ஜன மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய குடியரசு முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கூட்டத்தின் போது சபை அறையில் இல்லாதமை கவனிக்கப்பட்டது.
