13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்த கோரி ஐக்கிய மக்கள் முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்.!!!
(பாறுக் ஷிஹான்)
13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் முன்னணி ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபக செயலாளர் நாயகம் திருமேனி யோகநாயகன் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள இக்கடிதத்தில், மக்களால் வழங்கப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ள இச்சமயத்தில், நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பின் கீழ் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக ஏற்பாடுகள் பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறிப்பாக 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள மாகாண சபை முறைமை அதிகாரப் பகிர்வை ஊக்குவிக்கும் அரசியலமைப்புச் சூழல் தீர்வாக கருதப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாகாண சபை முறைமை இறுதி அரசியல் தீர்வாக இல்லாத போதிலும், அது அரசியலமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக உடன்படிக்கையாகும் எனக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் உட்பட பல்வேறு சமூகங்கள் அரசியல் சமத்துவம், நிர்வாக பங்கேற்பு மற்றும் உள்ளூர் மட்டத் தீர்மானங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பான சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்ற சூழலில், தற்போதைய அரசியலமைப்பின் முழுமையான அமுலாக்கம் உறுதி செய்யப்படுதல் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் முக்கிய அடையாளமாக அமையும் எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறையில் செயல்படுத்துதல், மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள சட்டத் திருத்தங்களை பாராளுமன்றம் ஊடாக ரத்து செய்து, பழைய விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் ஆகியவை ஜனநாயக நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளாக அமையும் என ஐக்கிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் மக்கள் ஜனநாயக வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதும், அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்புச் சூழலுக்குள் தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர் என்பதும் வெளிப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கும் ஆட்சி முறையை வலுப்படுத்தும் தீர்மானங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசு முன்னெடுக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், 13ஆம் திருத்தச் சட்டத்தை பாதுகாத்து அதனடிப்படையிலான அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மரியாதையுடன் கோரப்பட்டுள்ளது