உயிர்த்த ஞாயிறு தினத்தில் கைதுசெய்யப்பட்ட; இருவரும் விடுவிப்பு.!!!
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளின்போது அப்பகுதியில் நடமாடியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பெண் ஒருவர் உட்பட இருவரே கொழும்பு கடற்கரை வீதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் நேற்று (22) கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தபோது, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு பூஜை வழிபாடுகள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியதாக தெரிவித்து மேற்படி சந்தேக நபர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக குறிப்பிட்டனர்.
மேற்படி நபர்கள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது எனவும் அவர்கள் தொடர்பான உத்தரவு அவசியமற்றது எனவும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டனர். அதனைக் கவனத்திற் கொண்ட நீதவான் மேற்படி நபர்கள் இருவரையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.