நாட்டில் 34 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது – பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு.!!!
கடந்த 24 மணி நேரத்தில் பல ஆற்றுப் படுகைகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல்) பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார இன்று (12) தெரிவித்தார்.
ஜின் கங்கை, களு கங்கை, களனி கங்கை, யான் ஓயா ஆகியவற்றின் மேற்பகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 50 மில்லி மீட்டருக்கு அண்மையான மழை பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மழை காரணமாக சில ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், தற்போது அவை வெள்ள மட்டத்தை எட்டாமல் கீழ்மட்டத்திலேயே உள்ளன என்றும் விளக்கினார்.
இந்நிலையில், நாட்டின் சுமார் 34 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீர் மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தெதுரு ஓயா, ராஜாங்கனை, நாச்சதுவ, யான் ஓயா, பதவிய, லுனுகம்வெஹெர மற்றும் சேனநாயக்க சமுத்திரம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.