மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி: பலத்த பாதுகாப்புடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில், நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று (30) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின்படி, நீதிபதியின் நேரடி மேற்பார்வையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடியை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தவர்களை குருக்கள்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும் இடமே தற்போது அகழ்வுப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக, நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளதாகவும், அதில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















