டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் உள மேம்பாட்டுக்காக; Clean Sri Lanka – ‘Beyond Recovery’ தேசிய நடவடிக்கை.!!!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் உள நலனை மேம்படுத்தும் நோக்கில் Clean Sri Lanka – ‘Beyond Recovery’ என்ற புதிய மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், அரச அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான முதற்கட்ட செயலமர்வு நேற்று முன்தினம் (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில்வகித்தார்.
இதன் கீழ், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 6 பிரதான மாவட்டங்களில் இருந்து உளநலம் தொடர்பான புரிதல் கொண்ட மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளனர். குறித்த பயிற்சித் திட்டங்கள் நாட்டின் அனுபவமிக்க மனநல நிபுணர்களால் நடத்தப்படவுள்ளன.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு மையங்களில் செயல்படுத்த வேண்டிய விஞ்ஞான அடிப்படையிலான உளவள வேலைத்திட்டங்களை உருவாக்குதல், ஆலோசனை நிகழ்ச்சித் தொடர்கள் நடத்துதல் உள்ளிட்ட உளவள ஆலோசனைத் திட்டங்கள் குறித்து இந்த ஆரம்ப செயலமர்வில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நாட்டின் சமூக நெறிமுறைகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பை உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவது Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் முக்கிய இலக்காக உள்ளதுடன், அதனை நனவாக்கும் நோக்கத்துடன் இந்த ‘Beyond Recovery’ மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த செயலமர்வில் பங்கேற்று பயிற்சி பெறும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு மையங்கள் ஊடாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உள நலனை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் Clean Sri Lanka கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தனுர திசாநாயக்க, Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் அழைப்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரஸல் அப்போன்சு, Clean Sri Lanka செயலகத்தின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, Clean Sri Lanka செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








