உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

கரையோர வலயத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இறுதி எச்சரிக்கை; உரிமையாளர்களுக்கு 7 நாட்கள் அவகாசம்.!!!

• கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை.

இலங்கையின் கரையோர வலயங்களில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள், குடிசைகள், கொட்டகைகள் உள்ளிட்ட சட்டவிரோதக் கட்டுமானங்களை ஏழு நாட்களுக்குள் இடித்து அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, குறித்த கட்டுமானங்களின் உரிமையாளர்கள் அல்லது அவற்றில் வசிப்பவர்கள் அறிவித்தல் வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் அவற்றைத் தாமாகவே அகற்ற வேண்டும் என உத்தியோகபூர்வ கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உடைத்தகற்றல் கட்டளை அறிவித்தல்கள், சம்பந்தப்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் உட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இந்நடவடிக்கை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ. டேர்னி பிரதீப் குமாரவின் கையொப்பத்துடன் கூடிய குறித்த அறிவித்தல்கள், கடந்த 2026 நவம்பர் 21ஆம் திகதி சம்பந்தப்பட்ட கட்டுமானங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவச் சட்டத்தின் 31(2)ஆம் பிரிவின் கீழ் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் 1988ஆம் ஆண்டின் 64ஆம் இலக்க மற்றும் 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 1983 ஒக்டோபர் 01ஆம் திகதிக்குப் பின்னர் கரையோர வலயத்தில் உரிய அனுமதியின்றி எவ்விதக் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது எனச் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கட்டளையினால் பாதிக்கப்பட்டவர்கள், அறிவித்தல் வழங்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் குறித்த கட்டளைக்கு எதிராக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரிடம் மேன்முறையீடு செய்ய முடியும் எனச் சட்டத்தின் 31(3)ஆம் பிரிவு குறிப்பிடுகின்றது.

எனினும், மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள காலப்பகுதியிலும் அனுமதியற்ற கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது அல்லது அவற்றைத் தொடர்ந்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட ஏழு நாள் காலப்பகுதிக்குள் அல்லது மேன்முறையீடு நிராகரிக்கப்பட்ட பின்னர் அமைச்சின் செயலாளரால் வழங்கப்படும் கால அவகாசத்திற்குள் குறித்த கட்டுமானங்கள் அகற்றப்படாவிட்டால், அவற்றைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நேரடியாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பார்.

அவ்வாறு கட்டுமானங்களை அகற்றுவதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்படும் முழுத் தொகையும் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளரிடமிருந்து சட்டரீதியாக அறவிடப்படும் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய கடனாகக் கருதப்படும் எனவும் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கை, சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் வசிப்போர் மற்றும் கட்டுமானங்களின் உரிமையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1359816

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time