நாவற்குடா விபத்தில் காத்தான்குடி இளைஞன் பலி; மற்றொருவர் காயம்.!!!
மட்டக்களப்பு – நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞன் காயமடைந்துள்ளார்.
காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகத் தெரியவருகிறது. இந்த மோதலின் பின்னர், மோட்டார் சைக்கிள்களில் ஒன்றின் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதித்தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். இவர் வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டு வந்ததுடன், விடுமுறைக்காக நாடு திரும்பியிருந்த நிலையில், மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றைய இளைஞன் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்துகளைத் தவிர்க்க சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து, பாதுகாப்பாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.