மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு; மாற்றுக் காணி வழங்கத் திட்டம்.!!!
‘டித்வா’ புயல் காரணமாக மண்சரிவுக்கு உள்ளான பகுதிகளில் பாதிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக விரிவான கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, மண்சரிவுக்கு உள்ளான காணிகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவித்த பின்னர், அவற்றை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார்.
அபாய வலயங்களில் உள்ள காணிகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டால், உரிய அனுமதிப்பத்திரம் கொண்ட காணிகளின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி வழங்குவதற்கு திணைக்களம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான முழுமையான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில குடியிருப்பாளர்கள் அரச காணிகளில் அத்துமீறித் தங்கியிருப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு, அவர்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள காணி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி மேலும் தெரிவித்தார்.