ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்: விமானியின் வெளியேறும் இருக்கை மீட்பு – ஒப்படைப்போருக்கு சன்மானம் அறிவிப்பு.!!!
ஈரானில் அமெரிக்காவின் F-15E Strike Eagle போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானிய தரப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த விமானத்தில் பயன்படுத்தப்படும் பைலட்டின் வெளியேறும் இருக்கை (Ejection Seat) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இன்று (03) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான F-15E Strike Eagle போர் விமானம் ஒன்று ஈரானின் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விமானத்தில் பயன்படுத்தப்படும் Advanced Concept Ejection Seat II (ACES II) எனப்படும் வெளியேறும் இருக்கையை ஈரானியப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விமானம் ஆபத்தில் சிக்கும்போது பைலட் மற்றும் ஆயுத அமைப்பு அதிகாரி அமர்ந்திருக்கும் இருக்கைகள் ராக்கெட் சக்தியால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்கள் பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் இத்தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
F-15E Strike Eagle விமானத்தில் பொதுவாக இரண்டு பேர் (பைலட் மற்றும் Weapons Systems Officer) பயணிப்பர். தற்போது அந்த இருவரின் இருப்பிடமும் தெரியாத நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, குறித்த விமானியின் இருப்பிடத்தை கண்டறிந்து ஒப்படைப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
மேலும், ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் ஹைஃபா நகரின் தென்கிழக்கில் அமைந்துள்ள ரமத் டேவிட் விமானத் தளம் மீது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், டெல் அவிவ் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 50 இடங்கள் கொத்து ஏவுகணைகள் மூலம் குறிவைக்கப்பட்டதாகவும், தாக்குதல்கள் இலக்கு நோக்கிய மற்றும் விரிவானவையாக தொடரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


