காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு: புதிய ஜனாஸா வாகனம் கையளிப்பு.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், புலம்பெயர் காத்தான்குடி சமூகத்தினரின் நிதிப் பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா ஏற்றும் புதிய வாகனம் இன்று (03) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில், ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெற்றது.
கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தினரின் நிதிப் பங்களிப்பில் சுமார் 72 இலட்சம் ரூபாய் செலவில் இந்த வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூம்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்திய அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நுஸ்ரி நழீமி அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி ஹாரூன் ரஷாதி, காத்தான்குடி பள்ளிவாயில்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சத்தார், செயலாளர் மெளலவி ரமீஸ் ஜமாலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதேவேளை, கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் வாழும் காத்தான்குடி புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்து கொண்டு இந்த வாகனத்தை காத்தான்குடி ஜனாஸா நலன்புரிச் சங்கத்திடம் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
இந்த புதிய வாகனம் காத்தான்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு ஜனாஸா சேவைகளை மேலும் விரைவாகவும் திறம்படவும் வழங்க உதவும் என தெரிவிக்கப்படுகிறது.






