கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு; கட்டிடப் பகுதி இடிந்து வீழ்ந்ததால் வழக்குகள் ஒத்திவைப்பு.!!!
கொழும்பு மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ச்சி; திங்கட்கிழமை வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தம்
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவு திடீரென இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (31) நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறாது என கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம வெளியிட்ட அவசர அறிவிப்பில், தற்போதைய ஆபத்தான சூழ்நிலையை கருத்திற்கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் 2026 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் நீதிபதிகள் மேலதிக அறிவுறுத்தல்களை விரைவில் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்காலத் தடை உத்தரவுகளை (Enjoining Orders) நீடிப்பதற்கான கோரிக்கைகள் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டால், அவை பரிசீலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கட்டிடம் மேலும் பலவீனமடைந்த நிலையில் காணப்படுவதால், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் எவரும் குறித்த கட்டிடத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.
நிலைமையைப் பொறுத்து மேலதிக தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.