நுரைச்சோலையின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் செயலிழப்பு; தேசிய மின் கட்டமைப்பில் 600 மெகாவாட் இழப்பு.!!!
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பிற்கு 600 மெகாவாட் மின் கொள்ளளவு தற்காலிகமாக இழக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தற்போது லக்விஜய அனல் மின்நிலையத்தின் ஒரு மின்உற்பத்தி இயந்திரம் மட்டும் செயல்பாட்டில் இருந்து, அதன் மூலம் சுமார் 300 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கப்பட்டு வருகிறது. வழமையான பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஒரு மின்பிறப்பாக்கி நிறுத்தப்பட்டிருந்ததாகவும், கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மற்றுமொரு மின்பிறப்பாக்கி செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது செயலிழந்துள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகளுக்கான திருத்தப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திற்குள் அவற்றை மீண்டும் மின் உற்பத்திக்கு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டில் நிலவும் சாதகமான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், அன்றாட மின் விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை எனவும் இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.