காத்தான்குடியில் வனவிலங்கு ஒளிப்படக் கண்காட்சி: உவைஸ் முஹைதீனின் படைப்புகள் காட்சிக்கு.!!!
— எம். எஸ். எம். நூர்தீன்—
காத்தான்குடியைச் சேர்ந்த உவைஸ் முஹைதீனின் இரண்டாவது வனவிலங்கு ஒளிப்படக் கண்காட்சி இன்று (02) வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 05ஆம் திகதி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் சுங்க அத்தியட்சகராக பணியாற்றி வரும் உவைஸ் முஹைதீன், வனவாழ் உயிரினங்களை ஒளிப்படமாகப் பதிவு செய்வதிலும், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு தொடர்பான செயற்பாடுகளிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகின்றார்.
இந்தக் கண்காட்சியில் இலங்கையின் பல்வேறு தேசிய வனப் பகுதிகளிலும் கென்யா நாட்டின் மசாய் மாரா தேசிய வனத்திலும் எடுக்கப்பட்ட மொத்தம் 30 வனவிலங்கு ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஒளிப்படக்கலை தொடர்பாக துறைசார் வல்லுநர்களினால் செயலமர்வுகளும் (Workshops) நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜூத், உதவி பிரதேச செயலாளர் சில்மியா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் காத்தான்குடி நகர சபை செயலாளர் றினோசா முப்லி, முன்னாள் சவூதி அரேபியா தூதுவர் அம்சா, சுற்றாடல் அமைச்சின் இணைப்பாளரும் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளருமான அஷ்ஷெய்க் பிர்தெளஸ் நழீமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






















