காத்தான்குடியில் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வு.!!!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (16) அதிகாலை பஜ்ர் தொழுகையைத் தொடர்ந்து புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், மத்ரஸா மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்வில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள் நினைவுகூரப்பட்டதுடன், அவருக்காக துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
இலங்கை முஸ்லிம் அரசியலில் முக்கிய பங்காற்றிய மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவின் 26ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இந்நினைவேந்தல் நிகழ்வு காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.















