மட்டக்களப்பில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 66 வயது முதியவர் உயிரிழப்பு; இந்த ஆண்டில் 104 தற்கொலை மரணங்கள் பதிவு.!!!
மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகிலுள்ள வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (13) அதிகாலை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்ட 66 வயதுடைய முதியவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி குணசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 5.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சிகிச்சைப் பிரிவினர், தீக்காயங்களுக்கு உள்ளான முதியவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 104 தற்கொலை மரணங்கள் பதிவு
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 104 தற்கொலை மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நவம்பர் மாதத்தில் மாத்திரம் ஐந்து தற்கொலை மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மன உளைச்சல் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்பவர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவை வழங்குவதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது.