காத்தான்குடியில் 78ஆவது சுதந்திர தினம்: அரச, மத மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து வெகு விமர்சையாக அனுஷ்டிப்பு.!!!
— எம்.ரி.எம்.யூனுஸ் —
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78ஆவது சுதந்திர தினம் இன்று (04) புதன்கிழமை, காத்தான்குடி நகரில் அரச, மத மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை, காத்தான்குடி வர்த்தக சங்கம் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்துக்கு முன்பாக பிரதான சுதந்திர தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய இராணுவ பிரிகேடியர் ராஜபக்ஷ கலந்து கொண்டார். மேலும், இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், நகர சபை உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதனுடன், காத்தான்குடி பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜூத் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
மேலும், காத்தான்குடி மீடியா போரம், காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி, அல்-ஜாமிஅதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அறபுக் கல்லூரி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் ஏற்பாட்டிலும் தனித்தனியாக சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி பத்ரியா ஜூம்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அதன் ஸ்தாபக தலைவர் மெளலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதற்கு மேலாக, சுதந்திர ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டு, மனிதநேய சேவைக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கப்பட்டது.
மேலும், இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பினால் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள், உலமாக்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, தேசிய தினத்தை ஒற்றுமையுடனும் மரியாதையுடனும் சிறப்பாக அனுஷ்டித்தனர்.











































