சிறிய தகராறு இரட்டைக் கொலையில் முடிந்தது; 19 வயது சந்தேகநபர் கைது.!!!
கொழும்பு 10, மாளிகாவத்தை பகுதியில் இரு இளைஞர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவர் மொஹமட் ரெய்ஹான் மற்றும் 21 வயதான மொஹமட் அப்துல்லா ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர், குற்றத்திற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கூர்மையான ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின்படி, முகத்தைப் பார்த்தது தொடர்பான சிறிய வாய்த்தகராறு பின்னர் தீவிரமடைந்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
16 வயதான பாடசாலை மாணவர் இரண்டு இளம் பெண்களுடன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, சந்தேகநபரின் முகத்தைப் பார்த்ததாகவும், இதனைத் தொடர்ந்து தன்னை ஏன் பார்க்கிறார் என சந்தேகநபர் கேள்வி எழுப்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதற்கு குறித்த மாணவர், அழகாக இருந்ததால் பார்த்ததாக பதிலளித்ததாகவும், இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதல் மோதலுக்குப் பின்னர் வீட்டுக்குச் சென்ற பாடசாலை மாணவர், மேலும் சில நண்பர்களுடன் சந்தேகநபரின் வீட்டுக்கு அருகில் மீண்டும் சென்றுள்ளார். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு தீவிரமடைந்த நிலையில், சந்தேகநபர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாடசாலை மாணவரையும் அவருடன் சென்றிருந்த 21 வயதான இளைஞரையும் கத்தியால் குத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக்குத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் C. கல்யாணதுங்க அவர்களின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்று வருகின்றன.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சதுரங்க யசரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.